June 18, 2012

அதீத மனிதர்கள் (Superhumans) - 1


 நம்மை படைத்தது யார்? கடவுளா ? அல்லது டார்வின் கூறுவது போல் இயற்கையா? இந்த கேள்வி உங்களில் பலருக்கு தோன்றியிருக்கக்கூடும். இது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும், ஏன் இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய காலந்தொட்டே அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் மிக பழமையான விடைத் தெரியாத வினா இது. உலகெங்கும் கடவுளை எதிர்ப்பவர்களும், கடவுளை ஆதரிப்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர். எனினும் நம்மை தாண்டி நமக்கு கட்டுப்படாத ஒரு சக்தி இருப்பதை பெரும்பாலானோர் ( சில விஞ்ஞானிகள் உட்பட! ) ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனாலும் மனித மனம் விசித்திரமானது. எனவே அது கடவுளின் செயலாகக் கூறப்படும் படைப்புத் தொழிலை மேற்கொள்ள பண்டைய காலத்திலிருந்தே முயன்று வந்துள்ளது. இருப்பினும் அது கைகூடவில்லை. ( அப்போ குளோனிங்? அது வேற டிபார்ட்மெண்ட்! ). விளைவு. தன் மனதில் தோன்றிய கதாப்பாத்திரங்களுக்கு மனிதன் ஒவியம் மூலமும், எழுத்துக்கள் மூலமும் உயிரூட்டினான். அவ்வாறு உருவானவைதான் காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள். அவை உண்மை இல்லை என்பது நமக்குத் தெரியும். எனினும் இந்த அதிசய உலகத்தில் சிலர் காமிக்ஸ் பாத்திரங்களுக்கு இணையாகவும், இன்னும் சிலர் அதற்கு மேலாகவும் சக்தியுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்களில் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த தொடர்.

நீங்கள் டிஸ்கவரி சேனல் பார்க்கும் பழக்கம் உடையவரா? அப்படியானால்  “Stan Lee’s Superhumans” தொடரை பார்த்திருக்கக்கூடும். என்னை இந்த தொடரை எழுத அந்த நிகழ்ச்சியே தூண்டியது. சரி. அந்த விசித்திர சக்தி வாய்ந்த மனிதர்களை பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன் மேற்கண்ட நிகழ்ச்சியை பற்றிய ஒரு விளக்கவுரை அளிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியானது ஸ்டான் லீ என்பவரின் தலைமையில் டேனியல் ப்ரவுனிங் ஸ்மித் என்பவரால் நடத்தப்படுகிறது. இதில் டேனியல் அவர்கள் ஸ்டான் லீ-யீன் ஆலோசனைப்படி உலகெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விசேஷ சக்திப் படைத்த மனிதர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்.அதெல்லாம் இருக்கட்டும். ஸ்டான் லீ என்பவர் யார்? டேனியல் ப்ரவுனிங் ஸ்மித் என்பவர் யார்? தொடர்ந்துப் படியுங்கள்.
ஸ்டான் லீ. இன்று ஹாலிவுட் சினிமா இயங்கி கொண்டிருப்பதில் இவரது பங்கு அளப்பரியது. 1922-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர் காமிக்ஸ் கதை எழுத்தாளர், எடிட்டர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது. இன்று உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் கதாப்பாத்திரங்களான ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மேன், ஐயர்ன் மேன், தோர், ஃபென்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றின் உருவாக்கத்தில் இவரது பங்கு கணிசமானது. அது மட்டுமா? காமிக்ஸ் உலகத்தையே மாற்றி அமைத்த மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வெற்றி இவரையே சாரும்.

அடுத்து டேனியல் ப்ரவுனிங் ஸ்மித். 

உலகத்தால் “ ரப்பர் பையன் “ என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு Contortionist. அப்படி என்றால்? தன் உடம்பை தாறுமாறாக வளைப்பவர்களை இவ்வாறு அழைக்கிறார்கள். டேனியல் இந்த வகையை சேர்ந்தவர். இவருக்கென்று ஒரு வெப்சைட் கூட இருக்கிறது. நேரம் கிடைத்தால் நோட்டமிடுங்கள்.அவரது தளம் இங்கே


 நாம் மேற்கண்ட இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமானதே என்பதை உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி அடுத்த பதிவில் இருந்து அதீத மனிதர்களைப் (Superhumans) பற்றி பார்க்கவிருக்கிறோம். 

No comments:

Post a Comment