April 29, 2012

இந்தியாவின் அக்னி.....


வெற்றி! வெற்றி!.... பழைய கால தமிழ் படங்களின் தொடக்க வசனம் இதுதான். அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்தியாவின் குரலும் இதுதான். சமீபத்தில் ஏப்ரல் 19, 2012 அன்றுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது. அக்னி வரிசையில் இந்தியாவின் ஐந்தாவது படைப்பு அன்றுதான் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது ( அதுவும் வெற்றிகரமாக….). அந்த இனிய வியாழக்கிழமை சரியாக 8 மணி 7 நிமிடங்கள் வாக்கில் அக்னி – 5 செந்நிற பிழம்பை கக்கிக் கொண்டு வானில் பறந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.

        



இந்த வெற்றியின் மூலம் இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் ஆறாவதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், சீனா ஆகியவை ஆகும். அது மட்டுமில்லாமல் ஆசிய பிராந்தியத்தில் தன்னை வல்லரசாக பிரகடனப்படுத்தும் சீனாவிற்கு கொடுத்த சரியான பதிலடியாகும். இந்த வெற்றி சாத்தியமாக மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் கேரளாவில் உள்ள ஆலப்புழையை சேர்ந்த திருமதி. டெசி தாமஸ் ஆவார்.
                                  
                         
இவர் இப்பொழுது இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். இவரைப் போன்று இந்த வெற்றிக்காக உழைத்தவர்கள் பலர்.
அக்னி – 5 ஏவுகணை பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே….
·        இந்த ஏவுகணை அக்னி வரிசையில் மிக நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடியதாகும் ( அதாவது 5000 கி.மீ தாண்டி அமைந்துள்ள இலக்குகளையும் மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.)
·        இதன் எடை சுமார் 50 டன் ஆகும். இது 17.5 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டது.
·        இது முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பாகும்.
·        இதில் சுமார் 1.5 டன் எடையுள்ள அணுகுண்டுகளை கொண்டு செல்ல முடியும்.
·        இது ஒலியை விட 24 மடங்கு வேகமாக பயணிக்கக்கூடியதாகும்.
·        இதை உருவாக்க 2500 கோடி ரூபாய் ( ஏறத்தாழ $490 மில்லியன் ) செலவானது.
·        இதை சாலை வழியாகக் கூட இந்தியாவின் எந்த பகுதிக்கும் எடுத்து சென்று ஏவ முடியும்.
·        இதை கொண்டு சீனாவின் எந்த பகுதியையும் தாக்க முடியும்.
வழக்கம் போல இந்தியாவின் இந்த வெற்றியையும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் வெறுப்போடு பார்க்கின்றன. இருப்பினும் இந்தியா இவற்றை எல்லாம் கண்டு கொள்வதில்லை. இந்தியாவின் வெற்றி தொடரும் என்றால் அது மிகையில்லை.
குறிப்பு: இந்த வரிசையில் இந்தியாவின் அடுத்த வரவு அக்னி – 6 ஆகும். அது 10,000 கி.மீ தாண்டியும் உள்ள இலக்குகளை தாக்கவல்லதாக இருக்கும்.

  

No comments:

Post a Comment