May 30, 2012

இது ‘ஆனந்த’மான தருணம்...


மே 30, 2012. வரலாறு தன்னை மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொண்டது. இந்தியாவிற்கு இதுஆனந்தமான தருணம். ’64 கட்டங்களின் அரசர்என்று அழைக்கப்படும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் தனது உலக சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து ஆனந்த் வெல்லும் நான்காவது பட்டம் இது.

இந்த வருடம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கும் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டுக்கும் இடையே 12 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் 7வது போட்டியில் கெல்ஃபாண்டும் 8வது போட்டியில் ஆனந்தும் வெற்றிப் பெற்றனர். மீதி 10 போட்டிகளும் யாருக்கும் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தன. 12 போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தனர். ஆதலால் வெற்றியை இறுதி செய்ய டை-பிரேக்கர் போட்டிகள் நடந்தன.

இந்த வகையான போட்டிகள் நேர அடிப்படைக் கொண்டவையாகும். ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் கால அளவு கொடுக்கப்படும். நான்குப் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டாவதுப் போட்டியில் 77 நகர்த்தலின் முடிவில் ஆனந்த் வெற்றிப் பெற்றார். மற்ற மூன்று போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன. முடிவில் ஆனந்த் 2.5 புள்ளிகளும் கெல்ஃபாண்ட் 1.5 புள்ளிகளும் பெற்றிருந்தனர். இதனால் ஆனந்த் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்றார் ஆனந்த். இந்த போட்டியில் வெற்றிப் பெற்ற ஆனந்திற்கு ரூ. 8.6 கோடியும், தோல்வியுற்ற கெல்ஃபாண்டிற்கு ரூ. 6.4 கோடியும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் ஆனந்தின் பொறுமை குணம் ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகும் போரிஸ் சோர்வாகவே காணப்பட்டார். தோல்வியின் பாதிப்பு ? இருக்கலாம். தெரியவில்லை.

என்னுடைய மிகவும் கடினமான போட்டிகளில் இதுவும் ஒன்று “ – ஆனந்த்
ஆனந்தைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” – போரிஸ்
இந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவனை கட்டிப்பிடித்து வாழ்த்த ஆசையாயிருக்கிறது “ – ஆனந்தின் தந்தை.
இதற்காக அவர் நான்கு மாதங்களுக்கு முன்னரே பயிற்சியை தொடங்கி விட்டார். இந்த வெற்றிக்காக அவர் இழந்தவை, தியாகம் செய்தவை பல “ – அருணா ஆனந்த்.

குறிப்பு: இதைப் பற்றி எழுதும் போது தொலைக்காட்சியில் ஒரு காட்சி. ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணிக்கு மம்தா உற்சாக வரவேற்பு. என்ன சமுதாயமடா இது?



No comments:

Post a Comment